இரா.சோமசுந்தரம்
ஒரு சட்டம் அல்லது புதிய நிபந்தனை புகுத்தப்படும்போது அதற்கான காரணங்கள் இல்லாமல் செய்யப்படுவதில்லை.
அத்தகைய நிபந்தனை அல்லது சட்டத்தை எதிர்க்கும்போது ‘இதை இப்போது அமல்படுத்துவதன் அவசியம் என்ன?’ என்று கேள்வி கேட்பதும், அதற்கு அரசு சொல்லும் காரணத்தை விவாதத்துக்கு உட்படுத்துவதும், பெருந்திரளானோரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அது அமலாகும்படி பார்த்துக் கொள்வதும் நியாயமான அணுகுமுறைதான்.
இப்போது பட்டியல் வகுப்பு மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே உதவித்தொகை தரப்படும் அல்லது தொடரும் என்ற நிபந்தனைக்கு பட்டியல் வகுப்பு மாணவர்கள் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
திடீரென இப்படியொரு நிபந்தனையை மத்திய அரசு கொண்டுவரக் காரணம் என்ன? என்பது பற்றி மாணவர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, யாருமே பேசவில்லை.
இந்த நிபந்தனையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளாவிட்டாலும், மாநில அரசு தனது நிதியில் இந்த மாணவர்களுக்கு உதவித்தொகையை நிபந்தனையின்றி வழங்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரும்கூட, இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்கவோ, அல்லது மாணவர்களுக்கு அறிவுறுத்தவோ முயலவில்லை.
ஏன் இத்தகைய நிபந்தனையை மத்திய அரசு மேற்கொள்ள நேரிட்டது?
மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி சில தனியார் அறக்கட்டளைகளும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டுஉறைவிட வசதியும் அளிக்கின்றன. அல்லது அதற்கான செலவை ஏற்கின்றன.
இந்தத் தனியார் அறக்கட்டளைகளின் கருணை நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவர்களிடம் சலுகையைப் பெறும் மாணவர், ஒரு பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர் உதவித்தொகை அல்லது இலவச விடுதி சலுகையை இழந்துவிடுவார். மீண்டும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே (எந்தப் பாடத்திலும் ‘அரியர்ஸ்’ இல்லாத போதுதான்) அவருக்கு இலவச சலுகை மறுபடியும் தொடரும். அதுவரை, ஒன்று அவர் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும். அல்லது பொது மாணவர்களுக்கு இணையாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை, அந்த மாணவர்கள் தங்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கவனம் சிதறினால், கல்விக் கட்டணம் கையைக் கடிக்கும்.!
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கும் அவர்களது இலவச உண்டுஉறைவிடத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடுகின்றன.
இந்த மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காத மத்திய அரசு, இப்போது அதை நடைமுறைப்படுத்துவது ஏன்? உயர்கல்வியில் இந்த மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதுதான் காரணம். இதை உயர்கல்வி உலகம் நன்கு அறியும். ஆனால் அவர்களும் அரசியல்வாதிகள் போலவே மெüனம் சாதிக்கிறார்கள்.
எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அரசு நிபந்தனை விதிப்பது அதிகபட்சமான எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் (அரியர்ஸ் இருக்கக்கூடாது) என்று எதிர்பார்க்கும் உரிமைகூட அரசுக்கு இல்லாமல் போகுமா?
நகரங்களில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்து, இலவச உண்டுஉறைவிடத்தில் தங்குவதற்கும் இடம் கிடைத்துவிட்டால், பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வியை முடிக்கும்வரை (மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு) கல்வியில் ஆர்வம் செலுத்துவதில்லை.
இந்த உண்மையை அறிந்துகொள்ள ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துப் பார்க்கலாம். அரசின் கல்வி உதவித் தொகை மற்றும் உணவு உறைவிட சலுகை பெறும் மாணவர்களில் எத்தனை பேர் அனைத்துப் பருவத் தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் (அரியர்ஸ் இல்லாதவர்கள்) என்பதை கல்வித் துறை மிக எளிதில் கணினி உதவியுடன் பட்டியலிட முடியும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண் நிபந்தனையை வைத்தால், பெரும்பாலான மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்த மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அத்துடன், பொது ஒதுக்கீட்டிலும் இடம்பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.
அரசின் நிபந்தனையை எதிர்ப்பவர்கள் யார்? கல்லூரியிலும் மாணவர் விடுதியிலும் இடம் கிடைக்கப்பெற்று, கல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்கள் கவனத்தை நகர வாழ்வின் மோகத்தில் சிதறவிடும் மாணவர்கள்தான்.
அனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெறுவது கடினம் என்று கருதினால், பருவத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனையை மட்டுமாவது ஏற்க முன்வர வேண்டும்.
எந்த நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
Article:
http://bsubra.wordpress.com/2008/02/12/60pc-marks-for-grants-restrictions-on-scst-scholarships-a-flawed-government-policy/
# நிபந்தனைகளும் நியாயங்களும்
# ஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா?
என். விட்டல்
இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.
விடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு?
அதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.
உண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா? ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா?
60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.
முதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.
இந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.
ஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.
நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.
இந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா? அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.
இந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன? துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.
நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.
ஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.
அதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.
எனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.
Article:
http://bsubra.wordpress.com/2008/02/20/why-democracy-survives-in-india-n-vittal/

